About Me

My photo
LONGING TO GLORIFY THE LORD JESUS CHRIST TOGETHER

Thursday, June 24, 2010

காணிக்கை எடுக்காத சபை போதகர்

கடந்த ஞாயிறு (20.06.10) அன்று தாம்பரத்திலிருந்து படப்பை வழியாக காஞ்சிபுரம் செல்லும் வழியில் வாரணவாசி என்ற ஊரில் உள்ள கிருபை சத்தியம் சபை என்ற ஒரு சபையில் ஆராதனையில் கலந்து கொண்டேன். அதன் பாஸ்டர் அன்புகுமார் எனது நெடு நாளைய (சுமார் இருபது வருடம்) நண்பர். நான், ஒரு சபையில் உடன் ஊழியராக இருந்தபோது, அங்கு இருந்த வாலிபர் இவர்.

காலை ஏழு மணி முதல் ஒன்பதரை வரை ஆராதனை. ஆராதனையில் பாடல் பகுதி முடிந்தது. சிறிது நேரம் எல்லோரும் ஆவியில் நிறைந்து ஆராதனை செய்தபின்பு ஒரு ஆச்சரியம். நேரடியாக, செய்தி நேரம். மைக் என்னிடம்தரப்பட்டது. நான் உடனே "காணிக்கை எடுக்கப்படவில்லை" என நினைவுபடுத்தினேன்.

உடனே, அவர், "அண்ணே, நான் சபையில் காணிக்கை எடுக்கிறதில்லை. ஆராதனை முடிந்தவுடன், விருப்பமுள்ள ஜனங்கள் செலுத்துவதற்கு ஏதுவாக காணிக்கை பெட்டி அதோ இருக்கிறது" என்றார்.

கூட்டம் குறைவாக இருந்தால், செய்திக்கு முன்பாக எடுக்கும் (வழக்கமுள்ள) காணிக்கையை செய்தி முடிந்தபின்பு எடுக்கும் (அதற்குள் கூட்டம் சேர்ந்துவிடும் என்பதால்) ஊழியக்காரர்கள் மத்தியில் இவர் எனக்கு வித்தியாசமாக தெரிந்தார்.

இவர் ஒரு உடன் ஊழியராக இருந்த போது, அவரது பழைய (சென்னை சூளைமேடு) சபையில் அவரது போதகர் இவரை சிங்கபூர் அனுப்பி வேதாகம கல்லூரியில் படிக்க வைக்க போவதாக என்னிடம் கூறியதுண்டு. அப்படிப்பட்ட செல்ல பிள்ளையாக இருந்த இந்த தம்பிக்கு திருமணம் முடிந்ததும், "எனக்கு கிராமத்தில் ஊழியம் செய்ய அழைப்பு உள்ளது. நான் கிளம்புகிறேன்" என்று புது மனைவியுடன், 2001 ஆம் ஆண்டு இந்த ஊருக்கு வந்து விட்டார். மனைவி ஜூலி, நல்ல பக்குவமுள்ள பெண்மணி. எதிர்ப்புகள் ஏராளம். வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராட்டம் தான்.

புது மாப்பிள்ளைக்கு பைக் வாங்க கொடுத்த பணத்தில், சபைக்காக இடம் வாங்கினார். சபை கட்ட ஆரம்பித்து BASEMENT உடன் உள்ளது .

இந்த ஊரில், நான் பிரசங்கித்த சபையில் சுமார் 20 குடும்பங்கள் வருகிறார்கள். மற்றொரு ஊரில் நான்கு குடும்பங்கள் உண்டு. அவர்களுக்கு அங்கு சென்று ஆராதனை நடத்திவிட்டு வருவார். மே மாதம் VBS நடத்தி அதில் 65பிள்ளைகள் கலந்து கொண்டார்கள். பரிசு பொருட்கள் மற்ற செலவுகள் சுமார்ரூ.5000 வரை ஆகிவிட்டதாம். தாரளமாக சிறுபிள்ளைகளுக்கு செலவு செய்திருக்கிறார். ரெண்டு மகள்களையும் (அக்சா, அபிஷா) பள்ளியில் சேர்க்க பத்தாயிரம் மேல் செலவாகிவிட்டது என்றார்.

இவ்வளவு செலவுகள் இருந்தாலும், சபையின் ஜனங்களை வருத்தியோ, பயம் காட்டியோ தசமபாகம், காணிக்கை என்று பாடாய் படுத்தாமல், அழைத்த தேவன் உண்மைஉள்ளவர். அவர் முடிவு பரியந்தம் நடத்திடுவார் என்ற விசுவாசத்தோடு ஊழியம்செய்து வருகிற அவரது குடும்பத்தை நினைத்தால் ஆச்சரியம் தானே.

1 comment:

  1. உண்மையான தேவ ஊழியர்

    ReplyDelete